×

வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி : உறை பனியில் உருகுகிறது தென்னகத்து காஷ்மீர்

மூணாறு: மூணாறில் நிலவும் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரியாக குறைந்ததால் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு உறைபனியால் உருகுகிறது. இதனால்  பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது மூணாறில் கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. ஜன.1ம் தேதி நிலவரப்படி வெப்பத்தின் அளவு குறைந்து  அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.  நேற்றைய நிலவரப்படி காலை 7 மணிக்கு மைனஸ் 1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்தது. இதன் காரணமாக மூணாறில் தோட்டப் பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லட்சுமி எஸ்டேட், கன்னிமலை, குண்டளை, மாட்டுப்பட்டி, செண்டுவரை, சிட்டிவரை, லாக்காடு, தேவிகுளம் போன்ற பகுதிகளில் நேற்று மைனஸ் 1 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலை  பதிவானது.

இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரை மற்றும் வாகனங்களில் உறைபனி படர்ந்ததால் இப்பகுதிகள் வெண்மையாக காட்சியளித்தது. உறைபனி  கடுங்குளிர் காரணமாக மூணாறு காஷ்மீரை போல் காட்சியளிக்கிறது. வழக்கமாக மூணாறில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு 6 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது. ஆனால், தற்பொழுது மைனஸ் 1 டிகிரியை தொட்டிருக்கிறது. இதனால் கடுமையான குளிர் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த சூழலை மிகவும் ரசிக்கின்றனர்.
 
பிற்பகல் 2 மணி வரை வெயில் அடிக்கிறது. அதற்கு பிறகு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் எலும்புகளை ஊடுறுவத் தொடங்கி விடுகிறது. இனி வரும் நாட்களில் குளிரின் அளவு மைனஸ் 0 டிகிரியை எட்டக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறுகையில்,  கடுமையான பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன. பயிர்வகைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதே நிலை நீடித்தால் தேயிலை மற்றும் விவசாயம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்’’ என்று கூறினர். வாகன ஓட்டுனர்கள்
கூறுகையில், ``உறைபனி காரணமாக வாகனங்களில் டீசல் உறைந்து வாகனங்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது’’ என்று தெரிவித்தனர் .

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir , Temperature, frost, Munnar
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!